பிரிவு
மழைநீர் தேங்கிய குட்டையின்
சேற்றுப்படுகையிலிருந்து நீளும்
கருவேலங்குச்சியின் விளிம்பில்
தவமிருக்கும் தும்பியின்
தனிமைச் சோகத்தை தாளாது
கனத்து கருத்ததொரு அந்தியில்
நிகழ்கிறது நம் பிரிவு
எளிதில் எல்லாவற்றையும்
உதறிச் செல்கிறாய்
ஒரு குழந்தை
சென்றதற்கான
அத்தனை தடயங்களுடனும்
நிசப்தம் நிரம்பிய அறையாய்
கலைந்து கிடக்கிறேன்.
எலிகளுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்
ருசிகண்ட பூனையின் வருகை குறித்து
இருட்டைக் கிழித்து ஒளிரும் கண்களில்
தேடலின் தீவிரம் வழிய
பதுங்கிப் பாய்ந்து
மதில்மீதேறி நிதானித்து நகரும்
கயிற்றின் மீது நடக்கும்
தேர்ந்த வித்தைக்காரியின் சாகசத்தை விஞ்சி
அசட்டையுடன் இரையின் மீதே
கவனம் நீளும்.
பூனையின் ஆளுமையை பதிவு செய்வதற்கான
ஆவலில் ஒரு வெள்ளைத்தாளில்
ஓவியமாக்கும் முயற்சியில்
தாளின் மையத்திலிருந்து
மதில்சுவர் வரையும் பொழுதில்
நீளும் கோட்டின் மீது
பூனையின் கர்வம் மிளிர
நகர்கிறது பேனாமுனை.
கவிதை
நிலவின் ஒளியினைப் பருகி
லயித்த பனித்துளியொன்று
பாய்ந்து பளிச்சிடுகிறதென்
அந்தரங்க வெளியினில்
காலத்தின் பிரக்ஞையற்று
பட்டாம்பூச்சியாய்
திசைகளெங்கும் சிதறடிக்கும் என்னிடம்
நிறங்களுதிர்த்து நிர்வாணியாய் திரியென்று
மகரந்தம் பரவிய விரல்களினால்
சமிக்ஞை செய்கிறாய்
நிமிடத்தில் நிறைவேற்றி
உனைத்தீண்ட முயல்கையில் உடலுதிர்த்து வரும்படி
கட்டளையிடுகிறாய்
ஆட்சேபணைகளின்றி அடிபணிகிறேன்
உன் இம்சைகளைக் கொண்டாடுவதில்
பூரணமடைகிறதென் காதல்
என்னுயிர் நாதத்திலிருந்து ஒலிக்கிறது
உனக்கான வசியப்பாடல்
ஒளி உமிழும் இதழ்களுடன்
கணநேரத்தில் ஓராயிரம் அபிநயங்களுடன்
நர்த்தனம் புரிந்து
வண்ணத்தீற்றல்களுக்கு இடையே
மலராக மின்னி மறைகிறாய்
மகரந்தவாசம் நிரம்பியயென்
வெளியெங்கிலும்
பொழிகிறது தேன் துளிகள்.
Subscribe to:
Posts (Atom)